Tuesday, September 8, 2009

புஸ்வாணங்கள்

தலைப்பை படித்ததும் இது ஏதோ தீபாவளிக்கு கொளுத்தும் புஸ்வாணம் என்று எண்ணி விட வேண்டாம். சில சமயம் நம்மை சுற்றி நடக்கும் சில நிகழ்வுகள் பெரிய பிரச்சனையை கிளப்பும் என எதிர்பார்ப்போம். அது பற்றி மிகவும் பரபரப்பாகவும் பேசப்படும். ஆனால் சில நாட்களில் அது காணாமல் போய் விடும். அதை பற்றி எல்லோரும் மறந்து விடுவார்கள். அதாவது புஸ்வாணம் எப்படி ஆரம்பத்தில் பிரகாசமாய் புஸ் என்ற சத்தத்துடன் மேலே கிளம்பி பின்னர் ஒன்றும் இல்லாமல் போல் ஆகி விடுகிறதோ அது போல தான் இந்த நிகழ்வுகளும். அந்த வகையில் இரு புஸ்வாணங்கள்.

புஸ்வாணம் 1:

தினமலர் வாரமலர் படிக்கும் அன்பர்கள் அந்துமணியை பற்றி அறிந்து இருப்பார்கள். இந்த அந்துமணி வாரமலர் இதழில் பா.கே.ப. என்ற பகுதியையும் அந்துமணி பதில்கள் என்ற பகுதியையும் எழுதி வருபவர். இது அனைவரும் அறிந்த செய்தி. அந்துமணி தன்னை ஒரு ஆபீஸ் பாய் என்று கூறிக்கொண்டு இந்த கட்டுரைகளை எழுதி வருகிறார். பலரும் இதை நம்பி வந்தனர். வடிவேல் பாணியில் சொல்ல போனால் "நல்லா தானே போய்கிட்டு இருந்தது" இவருடைய பணி.
இந்த நிலையில் கடந்த 2007 ம் ஆண்டு ஜூலை மாதம் இவர் மீது உமா என்ற பெண் (இவர் தினமலரில் நிருபராக வேலை பார்த்தவராம்) பாலியல் புகாரை கூறினார். இதை சன் டி.வி.யும் தினகரன் பத்திரிகையும் போட்டி போட்டு கொண்டு செய்திகளாக வெளியிட்டு வந்தன. (சன் டி.வி. கலாநிதி மாறன் தான் இந்த பெண்ணை ஏற்பாடு செய்து புகார் கூற வைத்தார் என்ற வாதமும் உண்டு) அப்போது தான் பலருக்கும் அந்துமணி என்பவர் தினமலர் பத்திரிக்கையின் எடிட்டர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் என்பதும் அவரின் உண்மையான பெயர் ரமேஷ் என்றும் தெரிய வந்தது. இந்த குற்றச்சாட்டை தினமலர் பத்திரிகை மறுத்து அறிக்கை எல்லாம் வெளியிட்டார்கள். உமா ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்று தினமலர் கூறியது. உமாவிற்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தார்கள். அந்துமணி என்கிற ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சுமார் ஒரு வார காலம் பரபரப்பாக பேசப்பட்ட அதன் பின்னர் சுத்தமாய் அமுங்கி போனது. இந்த சம்பவம் இன்று எந்த நிலையில் இருக்கிறது என்று அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். இதில் மிகப்பெரிய காமெடி என்னவென்றால் இன்னும் ரமேஷ் வாரமலர் பத்திரிக்கையில் அந்துமணி என்ற போர்வையில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

புஸ்வாணம் 2:

கடந்த 2008 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இயக்குனர் மற்றும் நடிகருமான மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் மீது ஸ்டெபி என்ற பெண் புகார் ஒன்றை கூறினார். அதில் ரகுவண்ணன் தன்னை காதலித்ததாகவும், அவரின் வீட்டில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். இது தெரிந்த பின் மணிவண்ணன் வீட்டில் தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தார். ரகுவண்ணனுடன் அவர் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் வெளியிட்டார். ஆனால் மணிவண்ணன் குடும்பத்தினரோ ஸ்டெபி பணத்திற்காக இவ்வாறெல்லாம் செய்வதாக மறுப்பு தெரிவித்தார்கள். தமிழ் திரையுலகில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. என்ன காரணமோ பின்னர் இந்த விவகாரம் ஒன்றுமே இல்லாமல் அமுங்கிப்போனது. மணிவண்ணன் பெரிய இடம் மூலம் ஸ்டெபியை மிரட்டி பணிய வைத்ததாக கிசுகிசு உண்டு. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இது போன்று பல சம்பவங்கள் நடப்பது உண்டு. அது சில நாட்களில் காணாமல் போவதும் உண்டு. புதிய நிகழ்வுகள் பற்றி படிக்கும் நாம் பழைய நிகழ்வுகளை மறந்து விடுகிறோம். வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.