Tuesday, September 21, 2010

எந்திரன் படத்தின் கதை

ரஜினிக்கு இருக்கும் பல நல்ல குணங்களில் அவர் உண்மையை பட்டென்று கூறி விடுவதும் ஒன்று. ஆனால் இதுவே சில நேரங்களில் சிக்கலில் சென்று விட்டு விடும்.
சிவாஜி திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு ஒரு பேட்டியில் சிவாஜி திரைப்படம் "ப்ளாக் மணி" சம்பந்தப்பட்டது என்று கூறினார். ஜக்குபாய் திரைப்படம் இன்டர்நெட்டில் வெளிவந்தும் அதை பார்ப்பதற்கு ஆள் இல்லை. இந்த நேரத்தில் இன்டர்நெட்டில் ஜக்குபாய் படம் வெளியானதை கண்டித்து ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ரஜினி ஜக்குபாய் வாசாபி என்ற பிரெஞ்சு படத்தின் தழுவல் என்று கூறினார்.
சமீபத்தில் கூட ஏதோ ஒரு விழாவில் எந்திரன் ஒரு முக்கோண காதல் கதை என்று கூறி இருக்கிறார். இதை மட்டும் வைத்து கொண்டு நாம் எந்திரன் கதையை ஊகித்துள்ளோம். அனைத்தும் கற்பனையே. சரி. இனி எந்திரன் கதையை பார்ப்போம்.

விஞ்ஞானி ரஜினி மிகவும் கஷ்டப்பட்டு ஒரு அவரைப்போன்ற உருவம் கொண்ட ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அந்த ரோபோ எல்லா வேலையையும் செய்கிறது. அதாவது விஞ்ஞானி ரஜினிக்கு டை கட்டி விடுவது. ஷூ பாலிஷ் போடுவது போன்ற இத்யாதிகள். விஞ்ஞானி ரஜினிக்கு ஒரு காதலி. அவர் தான் ஐஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகி அல்லவா. அதனால் ரோபோ ரஜினிக்கு ஐஸ்வர்யா ராய் மீது ஒரு தலை காதல். விஞ்ஞானி ரஜினிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் காதல் இருப்பதை ரோபோ ரஜினி அறிந்து கொள்கிறது. உருவத்தில் விஞ்ஞானி ரஜினியைப்போல் இருப்பதால் மிகவும் எளிதாக ஐஸ்வர்யா ராயை காதல் செய்யலாம் என எண்ணும் ரோபோ ரஜினி  ஐஸ்வர்யா ராயை காதல் செய்து டூயட் எல்லாம் பாடுகிறது. ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு உண்மை புரிகிறது. அவர் விஞ்ஞானி ரஜினியிடம் அது பற்றி கூறுகிறார். விஞ்ஞானி ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் ரோபோ ரஜினிக்கு அறிவுரை கூறுகிறார்கள். நீ ஒரு எந்திரம் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் அதை ரோபோ ரஜினி ஏற்க மறுத்து விடுகிறது. ஐஸ்வர்யா ராய் கிடைக்க மாட்டார் என்ற காரணத்தினால் ரோபோ ரஜினி ஊரெல்லாம் அட்டகாசம் செய்ய ஆரம்பிக்கிறது. ஒரு வழியாக விஞ்ஞானி ரஜினி ரோபோ ரஜினியை செயல் இழக்க செய்கிறார். அதன் பின் எல்லாம் சுபமாக முடிகிறது.

இவ்வளவு சிம்பிளான கதையை யார் பார்ப்பார்கள் என்று எண்ண வேண்டாம். ஷங்கர் எப்போதும் அடுத்தவர்கள் காசில் படம் எடுக்கும் போது பிரம்மாண்டமாக தான் எடுப்பார். போதாக்குறைக்கு சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்து உள்ளார்கள். அதனால் விளம்பரங்களை போட்டு போட்டே படத்தை ஓட்டி விடுவார்கள்.

எது எப்படியோ. இன்னும் சில நாட்களில் படம் வெளிவர உள்ளது. உண்மையான ரிசல்ட் அப்போது தெரியும்.

Friday, July 9, 2010

உலககோப்பை கால்பந்து 2010

உலககோப்பை கால்பந்து போட்டிகள் ஒரு வழியாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த இறுதி போட்டியில் நெதர்லாந்து (ஹாலந்து) அணியும் ஸ்பெயின் அணியும் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கு முன் 3 வது இடத்திற்கான போட்டியும் நடைபெற உள்ளது. இதில் அரையிறுதி போட்டிகளில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்த உருகுவே அணியும் ஸ்பெயின் அணியிடம் தோல்வி அடைந்த ஜெர்மனி அணியும் மோதுகின்றன.

இந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் ஒரு சிறப்பு அம்சமாக ஆக்டோபஸ் மீனின் கணிப்பு இருந்தது. இங்கிலாந்தில் பிறந்த இந்த மீன் இப்போது ஜெர்மனியில் உள்ள ஒரு தொட்டியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மனி அணி விளையாடும் போட்டிகள் குறித்து முன் கூட்டியே முடிவை அறிந்து கொள்ள இந்த மீன் இருக்கும் தொட்டியில் இரு பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் உணவு வைக்கப்படும். ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரில் ஜெர்மனி நாட்டு கொடியும் மற்றொரு கண்டெய்னரில் ஜெர்மனியுடன் விளையாடும் மற்ற நாட்டு கொடியும் இருக்கும். ஆக்டோபஸ் எந்த கண்டெய்னரில் உள்ள உணவை படர்கிறதோ அந்த அணி வெற்றி பெரும் என்று கணிக்கப்பட்டது.

உலககோப்பை 2010 ஐ பொறுத்தவரை இந்த மீனின் கணிப்பு இதுவரை சரியாகவே இருந்துள்ளது. ஆயினும் கடந்த 2008 ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான கால்பந்து போட்டிகளில் இந்த மீனின் கணிப்பு இரு முறை தவறான முடிவை கொடுத்துள்ளது.

இனி நடைபெற இருக்கும் 3 வது இடத்திற்கான போட்டி மற்றும் இறுதி போட்டியில் யார் வெல்வார்கள் என கணிக்க ஆக்டோபஸ் பயன்படுத்தபட்ட போது 3 வது இடத்தை ஜெர்மனியும் இறுதி போட்டியில் ஸ்பெயினும் வெல்லும் என ஆக்டோபஸ் கணித்துள்ளது. ஜெர்மனி அணி தவிர மற்ற நாடுகள் விளையாடும் போட்டியின் முடிவை அறிய ஆக்டோபஸ் பயன்படுத்தபடுவது இப்போது தான்.

http://thatstamil.oneindia.in/sports/fifa-worldcup/2010/09-football-octopus-predicts-spain-win-wc.html

இதற்கிடையே உலககோப்பையை நெதர்லாந்து அணி தான் கைப்பற்றும் என்று சிங்கப்பூரில் உள்ள ஒரு கிளி கணித்துள்ளது. திரு.முனியப்பன் என்பவரிடம் வளர்ந்து வரும் அந்த கிளியின் கணிப்பு சரியாக இருக்குமா அல்லது ஆக்டோபஸின் கணிப்பு சரியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

http://thatstamil.oneindia.in/sports/fifa-worldcup/2010/09-football-singapore-parrot.html

இந்த உலககோப்பையின் சிறப்பு அம்சமாக ஸ்பெயின் அணி முதல் முறையாக இறுதி போட்டியில் விளையாட உள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் இது வரை உலககோப்பையை ஐரோப்பிய மண்ணில் தான் வென்றுள்ளார்கள். வேறு எந்த நாட்டில் விளையாடிய போது வென்றதில்லை. முதல் முறையாக ஐரோப்பிய நாடு ஒன்று அந்நிய மண்ணில் கோப்பையை கைப்பற்ற போகிறது. அது நெதர்லாந்தா ஸ்பெயினா என்பது வரும் ஞாயிறு பின்னிரவு (திங்கள் விடியற்காலை) அன்று நடைபெறும் இறுதி போட்டியின் முடிவில் தெரிந்து விடும்.

Wednesday, July 7, 2010

ஜொலிக்காத வாரிசுகள்

தமிழ் சினிமாவில் புகழ் பெற்று விளங்கிய பல நட்சத்திரங்கள் இருந்துள்ளார்கள். ஆனால் அவர்களை போல் அவர்களின் வாரிசுகளால்  பிரகாசிக்க முடியவில்லை. அவர்களைப்பற்றிய ஒரு சிறு கட்டுரை.

ஆனந்தபாபு

ஒரு காலத்தில் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்து பின் குணசித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் கலக்கிய திரு. நாகேஷ் அவர்களின் மகனான திரு.ஆனந்தபாபுவால் அவர் தந்தையை போல் புகழ் பெற முடியவில்லை. பாடும் வானம்பாடி, சேரன் பாண்டியன் உள்ளிட்ட சில பேர் சொல்லும் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு போதை மருந்து பழக்கம் இருந்ததாகவும் எயிட்ஸ் இருந்ததாகவும் வதந்திகள் உலா வந்தது. ஒரு வழியாக அதில் இருந்து வெளி வந்தவர் பின் திரு.நாகேஷ் அவர்களின் மரணத்திற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் தான் தீ விபத்தில் சிக்கி கொண்டதாக குறிப்பிட்டார். சமீபத்தில் வெள்ளியான ஆதவன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பூபதி - மனோரமா
மனோரமா மிக அதிக திரைப்படங்களில் நடித்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில்  இடம் பெற்றவர். ஆனால் அவர் மகன் பூபதியால் சில படங்களில் கூட நடிக்க முடியவில்லை.

சிபிராஜ் - சத்யராஜ்
வில்லனாக இருந்து பின் கதாநாயகனாக உயர்ந்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்க வைத்து இருந்த திரு.சத்யராஜ் அவர்களின் மகன் திரு.சிபிராஜ். (இன்று சத்யராஜும் பீல்ட் அவுட் ஆகி இருப்பது வேறு கதை) ஸ்டுடென்ட் நம்பர் 1 , மண்ணின் மைந்தன் என பல படங்களில் நடித்திருந்தாலும் பெயர் சொல்லி குறிப்பிடும் படி இது வரை எந்த படத்திலும் இவர் நடித்ததில்லை. சத்யராஜின் சொந்த தயாரிப்பான லீ என்ற லீலாதரன் மட்டும் விதிவிலக்கு. இந்த படமும் சுமாரான வெற்றி தான். சமீபத்தில் நாணயம் என்ற படத்தில் சிபி வில்லனாக நடித்திருந்தார்.

சாந்தனு - பாக்யராஜ்
திரைக்கதை அமைப்பதில் இந்தியாவில் நம்பர் 1 என புகழ் பெற்றவர் திரு.பாக்யராஜ். சக்கரகட்டி படம் மூலம் அறிமுகமான அவர் மகன் சாந்தனு நடித்து வேறு எந்த படமும் அதன் பின் வெளிவரவில்லை.

சரண்யா - பாக்யராஜ்
பாக்யராஜின் இயக்கத்தில் பாரிஜாதம் படத்தில் நடித்தார் அவர் மகள் சரண்யா. ஆனால் அந்த படத்திற்கு பிறகு அவர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.

மனோஜ் - பாரதிராஜா
இயக்குனர் இமயம் பாரதிராஜா தன் மகனை தாஜ்மஹால் என்ற படத்தில் அறிமுகப்படுத்தி இயக்கினார். அது ஊத்திக்கொண்டது. பின் தனது தயாரிப்பில் அல்லி அர்ஜுனா படத்தை சரணின் இயக்கத்தில் எடுத்தார் பாரதிராஜா. அதுவும் பிளாப். மனோஜால் ஒரு ஹீரோவாக வெற்றி பெற முடியவில்லை.

சக்தி - பி.வாசு
தொட்டால் பூ மலரும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சக்தி அதன் பின் சில படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் இன்னும் அங்கீகரிக்கபடாத நடிகராகவே உள்ளார்.

அஸ்வின் சேகர் - S.V.சேகர்
5000 நாடக மேடைகளை கண்ட S.V.சேகர் தனது மகனை வேகம் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்த படம் வேகமாய் தியேட்டரை விட்டு தான் ஓடியதே தவிர தியேட்டருக்குள் ஓடவில்லை.

பிரித்விராஜ்- பாண்டியராஜன்
இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜன் மகன் பிரித்விராஜ் "கை வந்த கலை" மற்றும் இன்னொரு படத்தில் நடித்துள்ளார். இவராலும் தந்தையை போல் புகழ் பெற முடியவில்லை.

இவர்களை தவிர பழம் பெரும் நடிகை வைஜயந்தி மாலாவின் மகன் சுசீந்திரா பாலி "நினைத்தாலே" படத்தில் நடித்துள்ளார். பழைய நடிகர் ரவிச்சந்திரன் மகன் சில படங்களில் நடித்துள்ளார். சிவாஜியின் பேரன் என அறிமுகமான துஷ்யந்த் "சக்செஸ்" மற்றும் "மச்சி" படங்களுக்கு பின் காணாமல் போனார். இப்படி இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

சினிமாவில் பணம் செல்வாக்கு இருந்தால் மட்டும் போதாது. அதிர்ஷ்டமும் வேண்டும் என்பதற்கு இவர்கள் ஒரு நல்ல உதாரணம்.

Monday, April 26, 2010

IPL போட்டிகள்

ஒரு வழியாய் IPL போட்டிகள் முடிவுக்கு வந்து விட்டது. இந்த IPL-3 ல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெரும் என்று பெரும்பாலானோர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அரையிறுதி போட்டிக்கே தகுதி பெறுமா என்று பலரும் என்னும் அளவிற்கு ஆரம்பத்தில் மோசமாக விளையாடிய சென்னை அணி பின்னர் சிறப்பாக விளையாடி கோப்பையை தட்டி சென்றுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இறுதி போட்டியில் தோற்ற சென்னை அணிக்கு இம்முறை வெற்றி கிட்டியுள்ளது. இது வரை 3 முறை நடந்துள்ள IPL போட்டிகளில் 2  முறை இறுதி போட்டிகளில் விளையாடிய பெருமை சென்னை அணிக்கு மட்டுமே சொந்தம். இது தவிர 3  முறையும் அரையிறுதி போட்டிகளில் சென்னை அணி விளையாடி உள்ளது. இதுவும் வேறு எந்த அணிக்குமே இல்லாத ஒரு விஷயம்.

IPL போட்டிகள் முடிவுக்கு வந்தாலும் அதன் உள்ளே இருக்கும் பல மர்மங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. கோடிக்கணக்கில் ஊழல்கள், அந்நிய செலவாணி மோசடி என்ற பல சிக்கல்களை தாண்டி அது மீண்டு வருமா அல்லது காணாமல் போகுமா என்ற கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் வழக்கம் போல் நேர்மையாக விசாரணை நடைபெறாமல் போனாலோ அல்லது நீதி கிடைக்க தாமதம் ஆனாலோ காலப்போக்கில் இதை பலரும் மறந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  மேலும் இந்திய திருநாட்டில் மெகா சீரியல்களை பார்ப்பதற்கென்று ஒரு கூட்டம் இருப்பது போல யார் கிரிக்கெட் விளையாடினாலும் அதை பார்ப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. கவுண்டமணி ஒரு படத்தில் "வீட்டுல திங்க சோறு இல்ல. அப்புறம் என்ன மயிருக்குடா கிரிக்கெட் ஸ்கோர்" என்று கேட்பார். ஆதலால் இப்போது இருக்கும் சிக்கல்களில் இருந்து IPL மீளாவிட்டாலும் அடுத்த வருடம் அது வெற்றி பெரும் வாய்ப்புகளே அதிகம்.  ஒரு வேலை நேர்மையான விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கபட்டு அதில் புழலும் கோடிக்கணக்கான பணத்திற்காகவும் அந்நிய செலவாணி மோசடிக்காகவும் IPL போட்டிகள் தடை செய்யப்பட்டால் ஆச்சரியமான ஒன்றாக இருக்கும்.

இந்த IPL சீசன் 3 முடிவுக்கு வந்ததன் மூலம் சினிமாக்கார்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு இருப்பார்கள்.  இனி வரும் வாரங்களில் பல புதிய திரைப்படங்கள் வெளிவரும். மேலும் இது கோடை விடுமுறை காலமாக இருப்பதால் அடுத்த சில வாரங்களுக்கு திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Thursday, January 28, 2010

விவேக் - ரிபீட் காமெடி

தற்போது தமிழ் திரையுலகில் அந்த காலத்தில் வெற்றி பெற்ற சில திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வெளி வந்துள்ளது/வெளிவர உள்ளது. உதாரணமாக நான் அவன் இல்லை, பாலைவனச்சோலை, முரட்டு காளை ஆகியவற்றை குறிப்பிடலாம். அதே சமயம் மற்ற நாடுகளில்/மொழிகளில் வெற்றி பெற்ற/நல்ல கதை உள்ள சில திரைப்படங்கள் இங்கு காப்பி அடிக்கபடுவதும் நடைபெறுகின்றது. இதற்கு சமீபத்திய உதாரணம் ஜக்குபாய். சில சமயம் ஒரு சில திரைப்படங்களில் உள்ள சில காட்சிகள் மட்டும் காப்பி அடிக்கப்படும். காப்பி அடிக்க எந்த மொழியை சேர்ந்த திரைப்படத்தையும் பயன்படுத்தபடுவது உண்டு. இந்த அனைத்து விஷயங்களிலும் ஒருவர் படைப்பை வேறு ஒருவர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் "சின்ன கலைவாணர்" மற்றும் "ஜனங்களின் கலைஞன்" என்ற பட்டங்களை கொண்ட பத்மஸ்ரீ திரு. விவேக் அவர்கள் தான் ஒரு திரைப்படத்தில் உபயோகப்படுத்திய நகைச்சுவையை வேறு சில திரைப்படங்களிலும் பயன் படுத்தி உள்ளார். அது பற்றி பார்ப்போம்.

1 . பிகர பார்த்த உடனே பிரெண்ட கட் பண்றவன்.
இந்த டயலாக் மாதவன் நடித்த மின்னலே என்ற திரைப்படத்தில் வரும். இதே டயலாக் விஜய் நடித்த யூத் மற்றும் ஷாம் நடித்த 12B திரைப்படத்திலும் வரும்.
2 . விவேக் ஒரு நிகழ்ச்சியில் இருப்பார். அப்போது அங்கே வரும் ஒருவரிடம் "இருந்து சாப்பிட்டு விட்டு தான் போகணும்" என்பார் விவேக். அதற்கு அந்த நபர் "எனக்கு வயிறு சரியில்லை" என்பார். இதற்கு விவேக் "அப்போ சாபிட்டுட்டு ஒரு ஓரமா இருந்துட்டு போங்கோ" என்று கூறுவார். இந்த நகைச்சுவை இடம் பெற்று உள்ள படங்கள் பிரபு, S.V.சேகர், வடிவேல் நடித்த திருப்பதி ஏழுமலை வெங்கடேசா மற்றும் விக்ரம் நடித்த சாமி.
3 . பிரபுதேவா, முரளி நடித்த அள்ளி தந்த வானம் படத்தில் "மாடர்ன் டிரஸ்'ஐ பார்த்து மயங்கிடாதீங்க இளைஞர்களே. வாயை திறந்த உள்ள ஒரு மினி கூவமே இருக்குது" என்ற டயலாக் ஸ்ரீகாந்த் நடித்த "ரோஜா கூட்டம்" படத்தில் வரும்.
4 . ஒருவரை சந்தித்த பின் நாம் ஹாய் (Hai) என்று சொல்லுவோம். இதை ஆய் ஆக மாற்றி இருப்பார் விவேக். சூழல்கள் வேறுபட்டாலும் இந்த டயலாக் இடம் பெற்றுள்ள படங்கள் சிம்பு, த்ரிஷா நடித்த அலை, விஜய் நடித்த யூத், பால குமார், சார்மி நடித்த காதல் கிசு கிசு, நந்தா, ஷெரின் நடித்த உற்சாகம்.
5 . விவேக்கின் பின்புறத்தை நாய் ஒன்று பதம் பார்த்து விடும். அப்போது அவர் சொல்வார்  "பன் பிஞ்சி ஜாம் வெளிய வருது". இந்த டயலாக் பால குமார், சார்மி நடித்த காதல் கிசு கிசு மற்றும் சரத்குமார் நடித்த 1977 படங்களில் வரும்.

இது தவிர "அடப்பாவி" என்ற டயலாகையும் "எஸ்கேப்" என்ற டயலாகையும் அவர் இதுவரை எத்தனை படங்களில் பயன்படுத்தி உள்ளார் என்பது அவருக்கு கூட தெரியாது.

இது போல் இன்னும் நிறைய இருக்கலாம். எனக்கு நினைவு இருந்த வரை எழுதி உள்ளேன். சாதரணமாக ஒருவர் படைப்பை வேறு ஒருவர் காப்பி அடிப்பார்கள். ஆனால் தன் காமெடியையே காப்பி அடிக்கும் விவேக் வித்தியாசமானவர் தான்.